தூயசக்தித் தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் அனுசரனையுடன் யாழ் மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான தூயசக்தித் தொழில்நுட்பங்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு

வளர்ந்துவரும் விஞ்ஞான உலகிலே தூய சக்தி முதல்களின் பாவனையையும் அவற்றின் தேவையையும் இன்றைய எம் பாடசாலை மாணவர்கள் அறிந்திருக்கவேண்டியது மிகவும் அவசியமானதொன்று. இதனைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம், வடமாகாணக் கல்வித்திணைக்களத்துடன் இணைந்து யாழ் மற்றும் மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களின் (Western Norway University of Applied Science) அனுசரணையுடன், வடமாகாண 1AB பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 8 முதல் 11 மற்றும் க.பொ.த (உ/த) விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத் துறைசார்ந்த மாணவர்களுக்குத் தூயசக்தி தொழில்நுட்பம் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கொன்றை நடாத்தத் திட்டமிட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மார்ச் 6 முதல் 14 வரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட 6 பாடசாலைகளில் 10 செயலமர்வுகளாக இக்கருத்தரங்கானது நடைபெறவுள்ளது. ஓவ்வொரு பாடசாலையிலிருந்தும் 70 மாணவர்களின் பங்குபற்றுதலுடன் ஏறத்தாழ 3500 மாணவர்கள் இக்கருத்தரங்கின் மூலம் பயன்பெறவுள்ளனர்.
இக் கருத்தரங்கிற்கான வளவாளர்கள் ஏலவே யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் நடந்த பயிற்சியாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். இம் மாணவர் கருத்தரங்கானது தூயசக்தி தொழில்நுட்பம் தொடர்பான விரிவுரைகள், காணொளி விளக்கங்கள், உபகரணங்களூடான செய்முறை விளக்கங்கள், மற்றும் உபகரணக் கையாள்கையூடான கற்றல் விளக்கங்கள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். இக்கருத்தரங்கின் இறுதியில் பங்குபற்றிய மாணவர்களுக்கிடையில் தூயசக்தி தொழில்நுட்பம் சார்ந்த பல்தேர்வுப் போட்டி நடாத்தப்பட்டு, வெற்றி பெறும் மாணவர்களுக்கு மே மாதத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இது தவிர பயிற்சிக் கருத்தரங்கில் பங்குபெறும் மாணவர்களுக்கு தூயசக்தித் தொழில்நுட்பங்கள் தொடர்பான சுவரொட்டி, ஆவணப்படமாக்கல்,  மற்றும் கண்காட்சிப் பொருளமைத்தல் போன்ற போட்டிகளில் பங்குபெறும் வாய்ப்புக்களும் வழங்கப்படும். இப்போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் மே மாதத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும் அதேவேளை அன்றைய நிகழ்வில் கலந்;துகொள்ளவுள்ள துறைசார் வல்லுனர்களைச் சந்திக்கும் சந்தர்ப்பமும் இவர்களுக்கு வழங்கப்படுமென்பது இங்கே சுட்டிக்காட்டவேண்டியதொரு விடயமாகும்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கானது வட மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலும் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தினர், வடமாகாணக் கல்வித்திணைக்களத்துடனும், யாழ்., மேற்கு நோர்வேப் பல்கலைக்கழகங்களுடனும் இணைந்து மேற்கொண்டு வருகின்றார்கள். இச்செயற்றிட்டம் இலங்கைக்கான நோர்வேத் தூதரகத்தின் நிதியுதவியின் கீழ் நடாத்தப்படுகின்றதென்பது இங்கே குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய விடயமாகும்.

தூயசக்தித் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆவணத்தினை பெற இங்கே அளுத்தவும் 

Biomass என்றால் என்ன என்பதை அறிய இங்கே அளுத்தவும்